முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவு - ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் (81) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ஷிபு சோரன் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதலமைச்சராக செயல்பட்டுள்ளார். ஷிபு சோரன் தற்போதைய ஜார்க்கண்ட் முதலமைச்சராக செயல்பட்டு வரும் ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார். அவரது மறைவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஷிபு சோரன் மறைவையொட்டி ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் காரனமாக இன்று முதல் 6ம் தேதி வரை அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இன்றும், நாளையும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கட்டிடங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.