ஒடிசா எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தேர்வு!
ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் அம்மாநில எதிா்க்கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது. மறுபக்கம் 147 தொகுதிகளுக்கு 78 தொகுதிகளை கைப்பற்றி ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று புவனேஸ்வரில் பிஜூ ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நவீன் பட்நாயக் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக்,
“பிஜூ ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக என்னைத் தேர்வு செய்துள்ளனர்.
மூத்த எம்எல்ஏ பிரசன்ன ஆச்சார்யா எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பிரமிலா மாலிக், எதிர்க்கட்சித் தலைமை கொறடாவாகவும், பிரதாப் கேஷரி தேப் துணை கொறடாவாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.