முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு அவரை பிடிக்கும் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு அவரை பிடிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை சார்பில் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக இன்று (டிச. 06) நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 22000 சீட்டுகள் அமைக்கப்பட்டு 1000த்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் நடிகைகள் கௌதமி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், ப.ரஞ்சித், மோகன் ராஜா, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விஜய் மற்றும் அஜித் கலந்து கொள்ளவில்லை.
“முதலமைச்சர் ஸ்டாலினை 1974-ம் ஆண்டிலிருந்து எனக்கு தெரியும். அப்போது இருந்தே என்னிடம் நன்றாக பேசுவார் ஸ்டாலின். ஸ்டாலின் முதலமைச்சர் ஆகி கலந்து கொள்ளும் முதல் திரையுலக விழா இது. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி நிறைய பேசுவார். 1950-ம் ஆண்டில் அவர் வாங்கிய வீடு தான் கோபாலபுரத்தில் இருப்பது. அப்போது இருந்து ஒரே இடத்தில் தான் அவர் இருந்தார். அதே எளிமை மு.க.ஸ்டாலினிடமும் உள்ளது. அவருடைய எழுத்துக்களை படித்தால் கண்ணில் தண்ணீர் வரும், சில எழுத்துக்கள் கண்ணிலிருந்து நெருப்பு வரும்.
ஒரு முறை காரில் நான் சென்று கொண்டிருக்கும் போது அவர் கார் கண்ணாடியை இறக்கி வணக்கம் சொன்னார். அதுதான் அவருடனான என்னுடைய முதல் சந்திப்பு. என் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிறேன் என்று சொன்னதும், அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என அவரை சந்திக்க போனேன். ஏன் என்றால் எனக்கு தமிழ் பெரிதாக வராது, பிறகு நான் சென்று கேட்கும் போது அவர் சொன்னார், ’சிவாஜி நடித்தால் சிவாஜிக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன். யார் நடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்ற மாதிரி தான் வசனம் எழுதுவேன் என்று சொன்னார்.
அவரிடம் நான் சொன்னேன் உங்களுக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என்று. மு.க.ஸ்டாலின் முதலில் தன்னுடைய அப்பா பெயரை காப்பற்ற வேண்டும். காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்” இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.