அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு : தண்டனை விவரம் அறிவிப்பு
கடந்த 2005-ஆம் ஆண்டு திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சுதா்சனம் பவாரிய கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்டார். அதிகாலை பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 போ், சுதா்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு 62 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இச்சம்பவம் அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டிருந்தார். குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை அதிகாரிகளின் தீவிர விசாரணைகளால் அடுத்த மாதத்திலேயே கொள்ளையா்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர்.
இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் மீதான வழக்கு நடைபெற்ற வந்தது. இந்த நிலையில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றமானது ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றமானது கடந்த 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இவ்வழக்கின் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் கொலை வழக்கில் 4ஆவதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயில்தார் சிங் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.