கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம்! போக்குவரத்து பாதிப்பு!!
போடிமெட்டு மலைச்சாலையில் பலத்த மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பிள்ளையாா் கோயில் அருகிலுள்ள தடுப்பணையில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. கொட்டகுடி ஆற்றைக் கடந்து, விவசாய நிலங்களுக்குச் செல்வதை விவசாயிகள், தொழிலாளா்கள் தவிர்த்து வருகின்றனர். ஒரு சிலர் வேறு வழியாகச் சென்று வருகின்றனா். இந்த நிலையில், நேற்று (08.11.2023) மாலை போடிமெட்டு மலைச் சாலையையொட்டிய கேரளப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், மலைச் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.
இந்தச் சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7, 8-ஆவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இதனால், இந்தப் பகுதியில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் பாய்ந்த பகுதியைக் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியிருந்தனா். போடி முந்தல் சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்துமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து, வாகனங்கள் அந்தப் பகுதியைக் கடந்து சென்றன.