மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ... 200 ஏக்கருக்கும் அதிகமாக வனப்பகுதிகள் சேதம்!
மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி தொடர்ந்து எரிந்த காட்டுத்தீயால், இதுவரை 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதிகள் எரிந்து நாசமாகின.
கோடைக்காலத்தில் பொதுவாக வெயில் அதிகமாக இருக்கும். இந்த அதீத வெப்பத்தால் நீர்நிலைகள் வற்றிப்போதல் காடுகள், நிலங்கள் வறண்டுபோதல் இயல்பு. இதனால் காய்ந்த இலைகள் ஒன்றோடு ஒன்று உரசி, அல்லது அதீத வெப்ப ஒளியால் தானாக காடுகள் தீப்பிடித்து காட்டுத்தீ ஏற்படும். வெயில் காலத்தில் ஏற்படும் இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் கடினம்.
கோடைக்காலத்தில் காட்டுத்தீகள் ஏற்படுவது இயல்பாக நடக்கக்கூடியவை. ஆனால் இந்த வருடம் கோடைக்காலத்திற்கு முன்பே அதிக வெப்ப தாக்கத்தால் பல காடுகள் தீப்பிடிந்து எரிந்து நாசமாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளம், அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் அணைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் நேற்று அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊரடி, ஊத்துக்காடு வனப்பகுதியில் காட்டு தீ பற்றியது. இதனை அணைக்க வனத்துறையினர் முயற்சி செய்தாலும் உயரமான மலைப் பகுதி என்பதால் தீயை பல மணி நேரம் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தற்போது வரை 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து சேதம் அடைந்து வருவதோடு,
வன விலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.