நைனிடாலில் காட்டுத் தீ... ராணுவ உதவியுடன் தீயணைப்பு பணிகள் தீவிரம்!
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம், நைனிடால் மலைப் பகுதியில் வெப்பத்தின் காரணமாக காட்டூத்தீ ஏற்பட்டுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக பரவி நைனிடால் நகரை அடைந்துள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அவசர நடவடிக்கையாக உத்தராகண்ட் அரசு, இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. அதன்பேரில் ஹெலிகாப்டர் மூலம், ஏரியிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்பட்டு, காட்டுத் தீ எரிந்து வரும் பகுதியில் ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
நைனிடால் மாவட்ட தலைமையகத்திற்கு அருகில் உள்ள காட்டில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், பைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹைகோர்ட் காலனி மக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவரும், உயர்நீதிமன்ற உதவிப் பதிவாளருமான அனில் ஜோஷி கூறுகையில்,
“பைன்ஸ் அருகே உள்ள பழைய காலியான வீட்டில் தீப்பிடித்துள்ளது. இதனால் ஹைகோர்ட் காலனிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று மாலையில் இருந்து தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பைன்ஸ் அருகே அமைந்துள்ள ராணுவ பகுதிக்கு தீ பரவாமல் இருக்க வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்தை கருத்தில் கொண்டு நைனி ஏரியில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது”.
கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 31 புதிய காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி, 33.34 ஹெக்டேர் வனநிலங்கள் நாசமாகியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து காடுகளுக்கு தீவைக்க முயன்ற மூன்று பேரையும் அந்த மாநில அரசு கைது செய்துள்ளது.