கார்குடி வனப்பகுதி அருகே கால்வாயில் விழுந்த குட்டி யானை - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் கால்வாயில் விழுந்து கிடந்த குட்டி யானையை மீட்டு தாய் யானையுடன் வனத்துறையினர் பத்திரமாக சேர்த்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில்
வனத்துறையினர் நாள் தோறும் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது வனப்பகுதியில் வேட்டை தடுப்பு முகாம் அருகே சிறிய கால்வாயில் குட்டி
யானையின் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது கால்வாயில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானை ஒன்று சிக்கி இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது – நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் ரோந்து வாகனம் மூலம் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கால்வாயில் விழுந்து கிடந்த
இளம்குட்டி யானையை மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட குட்டி யானையை தாய் யானையுடன் பத்திரமாக சேர்த்து குட்டி யானையை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.