அமெரிக்க மக்கள் தொகையில் 15 சதவிகிதம் வெளிநாட்டவர்கள்!
அமெரிக்க மக்கள்தொகையில் 15 சதவிகிதம் வெளிநாட்டவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் 3-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33.2 கோடி(332 மில்லியன்) என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில், 15 சதவிகிதத்தினர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் அமெரிக்காவின் சென்சஸ் அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின்படி கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 4.95 கோடியாக (49.5 மில்லியன்) உயர்ந்துள்ளது.
இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் குறித்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவியேற்றது முதல், இதுவரை இல்லாத புதிய உச்சமாக அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சம்(4.5 மில்லியன்) அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, அமெரிக்காவின் குறிப்பிட்ட 25 மாகாணங்களில் ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகையை காட்டிலும் அதிகம் என்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த 2021-ம் ஆண்டு பதவியேற்றது முதல், அமெரிக்காவின் வெளிநாட்டவர் மக்கள்தொகை, சராசரியாக ஒரு மாதத்திற்கு 1.37 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இருந்த போது, கொரோனாவுக்கு முந்தைய கால நிலவரப்படி, அமெரிக்காவின் வெளிநாட்டவர் மக்கள்தொகை, சராசரியாக ஒரு மாதத்திற்கு 42,000 என்ற அளவில் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில், இந்த எண்ணிக்கை சராசரியாக ஒரு மாதத்திற்கு 68,000 என்ற அளவில் அதிகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: “திரெட்ஸ் செயலியில் இனி அனைத்து மொழிகளிலும் தேடலாம்” – மெட்டா நிறுவனம் அறிவிப்பு!
ஜனவரி, 2021-க்கு பின், அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்களில் (4.5 மில்லியன்), பாதிக்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் என்ற விபரம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் குறித்த உத்தேச கணக்கீட்டின்படி தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, அதிபர் ஜோ பைடன் ஆட்சியில், சுமார் 26 லட்சம்(2.6 மில்லியன்) மக்கள் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் புலம்பெயர்ந்துள்ளதாக நீதிமன்ற தரவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனினும், ஒட்டுமொத்த வெளிநாட்டவர் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் சட்டப்படி அனுமதி பெற்று குடியேறியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2021 முதல் அக்டோபர் 2023 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்க எல்லைப் பகுதிகளில், தோராயமாக 80 லட்சம் (8 மில்லியன்) என்கவுன்ட்டர்கள் அரங்கேறியுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் எல்லைப் பாதுகாப்பு தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில், வெளிநாட்டவர்கள் மக்கள் தொகை வரலாறு காணாத அளவிற்கு வளர்ச்சியடைந்ததற்கு, தற்காலிக விசா அனுமதி பெற்று அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள், விசா காலம் முடிவடைந்த பின்னும் நாட்டை விட்டு வெளியேறாததே முக்கிய காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டுக்கான உள்நாட்டு பாதுகாப்புத் துறை தரவுகளின்படி, 8.50 லட்சம் வெளிநாட்டவர்கள் தங்கள் அனுமதி காலம் முடிந்த பின்னும் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி, 2021-க்கு பின், பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தோர் விபரம்:
தென் அமெரிக்காவிலிருந்து 28 சதவிகிதம்
மத்திய அமெரிக்காவிலிருந்து - 25 சதவிகிதம்
ஆப்பிரிக்கா (சஹாரா பகுதிகளிலிருந்து) - 21 சதவிகிதம்
கரீபியன் பகுதிகளிலிருந்து - 20 சதவிகிதம் மத்திய கிழக்கு பகுதிகளிலிருந்து - 14 சதவிகிதம்
அதுமட்டுமன்றி, லத்தீன் அமெரிக்க பகுதிகளிலிருந்து ஜனவரி, 2021க்கு பின், அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 29 லட்சம் (2.9 மில்லியன்) அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவில் புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 63 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.