தமிழ்நாட்டில் மீண்டும் #FORD - முதலமைச்சரின் முயற்சியே காரணம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். சான்ஃபிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்தன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. இதுவரை 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். நாளை காலை 8.45 மணியளவில் சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தனிப்பட்ட முறையில் #Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!
இந்த அமெரிக்க பயணத்தின் போது, பிரபல கார் உற்பத்தி நிறுவனமாக ஃபோர்டு-ன் அதிகாரிகளுடனும் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஃபோர்டு நிறுவன நிர்வாகி கே ஜார்ட் வெளியிட்ட செய்தியில், சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதி கோரி மாநில அரசுக்கு கடிதம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“FORD IS BACK! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின், ஓராண்டாக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சி, ஃபோர்டு மோட்டார் கம்பெனி மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்ப வழிவகுத்துள்ளது. தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனை வெளிப்படுத்த முதலமைச்சர் எடுத்த முயற்சிகள் பெரும் பலனைத் தந்துள்ளன. இன்னும் பல வரவிருக்கிறது”
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிவிட்டுள்ளார்.