ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இளம் பணக்காரர்கள்!
2024-ஆம் ஆண்டின் இந்திய கோடீஸ்வர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் Zerodha நிறுவனர்கள் மற்றும் Flipkart நிறுவனர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுகான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் Zerodha நிறுவனர்கள் மற்றும் சகோதரர்களான நிகில் காமத் (37) மற்றும் நிதின் காமத் ஆகியோரும், Flipkart நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
நிகில் காமத்தின் சொத்து மதிப்பு 3.1 பில்லியன் டாலராகவும், அவரது மூத்த சகோதரர் நிதின் காமத்தின் சொத்து மதிப்பு 4.8 பில்லியன் டாலராகவும் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் காமத் சகோதரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனர் பின்னி பன்சால், 1.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வைத்துள்ளார். சச்சின் பன்சாலின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பின்னி பன்சாலின் சொத்து மதிப்பு நிலையாக உள்ள நிலையில் சச்சின் பன்சாலின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
இருப்பினும் அவர்கள் இருவரும் இந்தியாவின் இளம் பணக்காரர்களாக திகழ்கின்றனர். இந்தப் பட்டியலில் 116 பில்லியன் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
2023ல் 83.4 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2024ல் 116 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் நரேஷ் ட்ரெஹான், ரமேஷ் குன்ஹிகண்ணன் மற்றும் ரேணுகா ஜக்தியானி உள்ளிட்ட புதிய கோடீஸ்வரர்களும் இணைந்துள்ளனர்.