“நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை கேட்கிறேன்” - கனிமொழி எம்.பி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். 8வது முறையாக இன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பீகார் மாநிலத்திற்கு என 5 பெரிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இதில் மற்ற மாநிலங்களை விட பீகார் மாநிலத்திற்குதான் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பீகார் மாநிலத்தைப் போல வேறு எந்த மாநிலத்தின் பெயரையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்வளவாக குறிப்பிடவில்லை.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது. இதனை மனதில் வைத்துதான் நிதியமைச்சர் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கனிமொழி கருணாநிதி எம்பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
நான் நாடாளுமன்றத்தில் இருந்த இத்தனை ஆண்டுகளில், பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதுவே முதல் முறை” எனக் குறிப்பிட்டுள்ளார்.