கர்நாடக பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக கௌரவ விரிவுரையாளராக திருநங்கை நியமனம்!
கர்நாடக பல்கலைக்கழகம் ஒன்றில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் கௌரவ விரிவுரையாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் விஜயநகராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகத்தில், கே.என். ரேணுகா பூஜர் (27) என்ற திருநங்கை கன்னடத்துறையில் கௌரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் கௌரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அந்த பல்கலைக்கழகத்திலேயே கன்னடத்தில் முதுகலை பட்டம் பெற்ற ரேணுகா பூஜர், இந்த மாத தொடக்கத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது;
“ரொம்ப சந்தோஷமா இருக்கு... பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்... பல்கலைக் கழக நிர்வாகம் எனக்கு நிறைய உதவியிருக்கு.. 2018-ல் டிகிரி முடித்தேன். 2017-ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு படிக்கும் போது திருநங்கை ஆனேன். 2022-ல் முதுகலை படிப்பை முடித்தேன். தற்போது கௌரவ விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன்” என தெரிவித்தார்.
கௌரவ விரிவுரையாளர் பொறுப்புக்கு 30 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், பூஜர் அப்பொறுப்புக்கு தேவையான தகுதிகளையும், நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருந்ததாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கர்நாடகாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் திருநங்கை ஒருவரை கௌரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.