கால்பந்து வீரர்… பேட்மிண்டன் வீரரான கதை… நடுவில் ஐஐடி பட்டம் வேறு… - யார் இந்த தங்கமகன் #NiteshKumar?
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் போட்டியின் SL3 பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார், கிரேட் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை எதிர்கொண்டார். இதில் இந்தியாவுக்கு 2வது தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார் நிதேஷ் குமார். இத்துடன் இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் 22வது இடத்திற்கு முன்னேறியது.
யார் இந்த நிதேஷ் குமார்?
1994-ம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் பிறந்தவர் நிதேஷ் குமார். இவர் 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ரயில் விபத்தில் தன்னுடைய காலை இழந்துள்ளார். கால்பந்தாட்டத்தில் மிகவும் நாட்டம் கொண்ட நிதேஷ், விபத்திற்கு பிறகு ஐஐடி நுழைவுத்தேர்வில் கவனம் செலுத்தி, அதில் தேர்ச்சி பெற்று ஐஐடி மண்டியில் பட்டம் படித்துள்ளார். அங்கு தன்னுடைய பேட்மிண்டன் திறமையை கண்டறிந்த அவர், பேட்மிண்டனை தன்னுடைய வாழ்க்கையாக மாற்றினார்.
2016-ல் ஹரியானா அணியின் ஒரு பகுதியாக பாரா தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற பிறகு அவரது பயணம் தொடங்கியது. அங்கிருந்து தனது முதல் சர்வதேச பட்டத்தை 2017 ஐரிஷ் பாரா-பேட்மிண்டன் இன்டர்நேஷனலில் வென்ற அவர், BWF பாரா பேட்மிண்டன் உலக சர்க்யூட் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளிலும் வெற்றிகளை குவித்துள்ளார். 2024 பாரீஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற நிதேஷ் குமார், ஹரியானாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறையின் மூத்த பேட்மிண்டன் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரா பாட்மின்டன் விரரான பிரமோத் பாகத் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோரின் கடும் உழைப்பால் ஈர்க்கப்பட்டு மீண்டும் விளையாட்டிற்குள் அடியெடுத்துவைத்ததாக நிதேஷ் தெரிவித்துள்ளார். பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற ஐஐடி பட்டதாரி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.