கனத்த இதயத்துடன் ஓய்வு பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி இன்று தனது கடைசி சர்வதேச கால்பந்து போட்டியில் ஆடினார்.
39 வயதாகும் சுனில் சேத்ரி தனது கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக சேத்ரி களம் கண்டார்.
போட்டி கோல்கள் இன்றி டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து சுனில் சேத்ரி கனத்த இதயத்துடன் விடைபெற்றார். அவருக்கு குரோஷியாவின் மூத்த வீரரான லூகா மோட்ரிக், போட்டிக்கு முன் காணொளி ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறினார்.
சுனில் சேத்ரியின் கடைசி சர்வதேச கால்பந்து ஆட்டம் கொல்கத்தாவின் சால்ட் லேக் திடலில் நடைபெற்றது. இதை நேரில் காண 50,000க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர் கண்ணீர் மல்க கால்பந்து திடலை விட்டு விலகும் விடியோவை எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது இந்திய கால்பந்து அணி நிர்வாகம். இந்த விடியோ கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பாரவையாளர்களையும் நெகிழச்செய்துள்ளது.