இந்து உணவு, இஸ்லாமியர் உணவு என வகைப்படுத்துவதா? ஏர் இந்தியா விமானங்களின் உணவுப் பட்டியல் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு!
ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவுப் பட்டியலில் இந்து மீல்ஸ், இஸ்லாமியர் மீல்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஏர் இந்தியா அவ்வப்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வந்தது. இதனிடையே, ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சிக்கு பயணித்த வினீத் என்பவர் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மோசமான சாப்பாடு, உட்காரவே முடியாத இருக்கை, லக்கேஜ் உடைப்பு, தாமதமான பயணம் என மொத்த அனுபவமும் ஒரு திகில் கதை என்று விமர்சித்திருந்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், "விமானம் கிளம்பவே 25 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஆனது. எனது இருக்கை சாயவே இல்லை. மோசமான உணவு, தேய்ந்து போன சீட், அழுக்கு சீட் கவர்கள், ரூ.500000 கட்டி பயணித்த எனக்கு வேலை செய்யாத டிவி, லக்கேஜ்களும் உடைப்பு என எல்லாமே நேர்ந்தது. நான் இதை விட மலிவான விமான டிக்கெட்டை எதிகேட் ஏர்லைன்ஸிஸை பார்த்தேன். ஆனால் ஏர் இந்தியாவில் நேரடி விமான சேவை என்று இருந்ததால் இப்படி தேர்வு செய்தேன்" என்று வேதனையுடன் தனது கருத்தை வினீத் கூறினார். இது இணையத்தில் வேகமான பரவி பேசும் பொருளாகியது.
இதனை தொடர்ந்து தற்போது, ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவுப் பட்டியலில் இந்து மீல்ஸ், இஸ்லாமியர் மீல்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.