2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் - தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதிகனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சாப்பாடு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. கர்ப்பிணி பெண் உட்பட நால்வர் மீட்கப்பட்டு அவர்கள்மதுரையில் பாதுகாப்பாக உள்ளனர்.
போதுமான அளவுக்கு உணவு பொருட்கள் மற்றும் குடிநீரும் மதுரை விமான நிலையம் , பரத்தூர் நேவி ஏர்வேஸ் பகுதியிலிருந்து செயல்படுகிறது. தேசிய மீட்பு குழுவினர் மூலம் மக்களை இரவு முதல் பாதுகாப்பாக மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 133 மொபைல் மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 279 படகுகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. 10,082 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 672 ஜே சி பி, பொக்லைன் போன்ற வாகனங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை உள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியாக பிரிந்து தேவையான பொருட்களை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தெருக்களுக்கும் உணவுகளை எடுத்து செல்வது சவாலாக உள்ளது. சேலம், திருப்பூர் பகுதிகளிலிருந்து பால் கொண்டு வந்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 79 பேருந்துகள் தான் தூத்துக்குடியில் செயல்பாட்டில் உள்ளது.
மழைநீர் வடிந்த பின் தான் போக்குவரத்து சீராகும். தூத்துக்குடி மாவட்டத்தில் 15,626 தொலைத் தொடர்பு கோபுரங்கள் உள்ளன, 1200க்கு மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பயணிகள் ரயிலில் சிக்கியவுடன் அவர்களுக்கு இரண்டாவது ஹெலிகாப்டர் மூலமாக உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு, பிரெட், பிஸ்கட், ஜாம், குடிநீர், பால் பவுடர் போன்றவை ஹெலிகாப்டர் மூலமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
300 பேர் ரயில் நிலையத்தில் உள்ளனர். அருகில் உள்ள பள்ளி வளாகத்தில் 200 பேர் உள்ளனர். காவல்துறை மூலமாக பள்ளி வளாகத்தில் உள்ளவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 6 அமைச்சர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை மாநகராட்சி பகுதிகளில் ஓரளவிற்கு தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. இன்று மதிப்பிற்கு மேல் நீர் வடிய வாய்ப்புள்ளது. அதிகப்படியான பகுதிகளில் படகு மூலமாக சென்று சேர முடியவில்லை. அதிக நீர் தேங்கியுள்ளது.
மத்திய அரசு மூலம் என்னென்ன உதவிகள் தேவைப்படும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து நேற்று இரவு முறையையே 10,000 மற்றும் 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.