For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து!

09:55 PM Jan 18, 2024 IST | Web Editor
சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து
Advertisement

சென்னை, ஆதம்பாக்கத்திலிருந்து வேளச்சேரியில் இருந்து பரங்கிமலையை இணைக்கக்கூடிய பறக்கும் ரயில் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேம்பாலம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, சோழிங்கநல்லூர் சுற்றித்தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னையின் ஓஎம்ஆர் பகுதிகள், ஈசிஆர் பகுதிகள், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிகளுக்கு புறநகர் பகுதி மக்கள் செல்ல, பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது.

சென்னையின் புறநகர் பகுதியையும், ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஎம்ஆர் உள்ளிட்ட பகுதிகளையும் இணைக்கும் முக்கிய ரயில் பாதை என்றால் அது வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தான். இந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த தில்லை கங்காநகர் பகுதியில் பறக்கும் ரயில் கட்டுமான பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதலில் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், இரு தூண்களுக்கு இடையேயான மேற்பரப்பில் தண்டவாளம் அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அப்பொழுது திடீரென பாரம் தாங்காமல் பரங்கிமலை வேளச்சேரி செல்லக்கூடிய பாதையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் சரிந்து கீழே விழுந்தது. அந்த சமயத்தில், கட்டுமான பணிகளில் ஈடுபட்ட நபர்களோ, பொதுமக்களோ அங்கு இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags :
Advertisement