#Spain ஐ புரட்டிப்போட்ட மழை வெள்ளம் - உயிரிழப்பு எண்ணிக்கை 202ஆக உயர்வு!
ஸ்பெயின் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் அக்டோபர் 29ம் தேதி பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நகரங்களின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும், இந்த மழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : #WayanadByElection | போட்டியிடுவோரின் இறுதிப் பட்டியல் வெளியானது – எத்தனை பேர் தெரியுமா?
கனமழையால் மலாகாவில் இருந்து வாலென்சியா வெள்ளக்காடாக காட்சியளித்தன. வாலென்சியாவில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 202-ஐ க் கடந்துள்ளது. மேலும், பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டின் வரலாற்றில் மிகக் கொடூரமாக தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என அந்நாடு தெரிவித்துள்ளது. காவல்துறையினரும், மீட்புப் பணிகளும் ஹெலிகாப்டர்கள் மூலம் வீடுகள் மற்றும் கார்களில் சிக்கி இருந்த மக்களை மீட்டனர். கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.