கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு... உணவு கிடைக்காமல் தவிக்கும் மலைவாழ் மக்கள்!
உடுமலை அருகே கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணமாக உணவு உள்ளிட்ட அடிப்பபை வசதிகள் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை புலிகள் காப்பகத்தில் ஆனைமலையில் 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக கேரளா வனத்துறைக்கு சொந்தமான சம்பகாடு வழியை பயன்படுத்தி வந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு தமிழக மலைவாழ் மக்கள் அந்த பாதையில் அனுமதிக்கப்படவில்லை. தமிழக மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய நகரப் பகுதிக்கு வருவதற்கு கூட்டாறு பாதையை பயன்படுத்த தொடங்கினர்.

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக கூட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மலைவாழ் மக்கள் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆற்றை கடக்க முடியாததால் மலைவாழ் மக்களால் ரேசன், மருத்து உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் வனப்பகுதிக்குள் முடங்கி உள்ளனர்.
அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பரிசல் மூலம் ஆற்றை கடந்து வந்த நிலையில் அங்கிருந்த பரிசலையும் வனத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இது அவர்கள் ஆற்றை கடப்பதை முற்றிலுமாக முடக்கியது. கூட்டாறு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கூட்டாற்றில் தண்ணீர் அதிகளவு செல்லும் நிலையில் மலைவாழ் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்துசெல்கின்றனர்.