கனமழையால் வெள்ளப் பெருக்கு - கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் ... வனத்துறை அறிவிப்பு!
கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வானிலை ஆராய்ச்சி மையம் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதீத மழை பொழிவு இருக்கும் என்பதை கணித்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கபட்டு உள்ளது.
இதன் காரணமாக அரக்கோணம் பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் கோவை வந்து உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்துரிதபடுத்தபட்டு உள்ளது. இந்நிலையில் கோவையின் முக்கிய நிராதாரமான சிறுவாணி அனையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் சிறுவாணி அனையின் நீர்மட்டம் 19.02 அடியாக உயர்ந்து உள்ளது.
அடிவாரத்தில் 53 மி.மீ., அணைகட்டு பகுதியில் 80 மி.மீ., மழை பொழிவு பதிவுவாகி உள்ள நிலையில் அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில் அணையின் தற்போதைய நீர்மட்டம் - 19.02 அடியாக உயர்ந்து உள்ளது.
சிறுவாணி அணையில் இருந்து கோயமுத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101.40 எம்.எல்.டி. அளவில் இருந்து 62.02 என்ற அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் அதிக மழை பொழிவினால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதன் காரணமாக சுற்றுலா தளமான கோவை குற்றால பகுதியில் வெள்ள நீர் ஆர்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.