தாமிரபரணியில் பெருவெள்ளம் - அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!
தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
இதையும் படியுங்கள் : “உங்களுக்கு வீடு தர முடியாது..” - கர்நாடகாவில் அரங்கேறும் சாதிய பாகுபாடுகள்!!
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நிவாரணப் பணி மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சேதங்களை தவிர்க்கவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
மாவட்ட நிர்வாகம், மாநகாரட்சி நிர்வாகம், காவல் துறை ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலைமுதல் தற்போது வரை சராசரியாக 28 செ.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டி பகுதியில் -395 மி.மீ. மழையும், குறைந்தளவாக சேர்வலாறு பகுதியில் 178 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் தற்போது 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், கடனாநதி அணையிலிருந்தும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு தாமிரபரணி ஆற்றுடன் கலந்து வருகிறது.
பாபநாசம் அணை 90 சதவீதம் நிரம்பிவிட்டது. அணைக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு 82 சதவீதமும், மணிமுத்தாறு 72 சதவீதமும், வடக்கு பச்சையாறு 86 சதவீதமும், நம்பியாறு 100 சதவீதமும், கொடுமுடியாறு 77 சதவீதமும் நிரம்பியுள்ளன.
அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால், அதற்கேற்றவாறு தாமிரபரணியில் தண்ணீரை திறந்து விடும் நிலையில் இருக்கிறோம். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்றிரவும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பெய்தால் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும். எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 165 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். எந்தச்சூழலையும் சமாளிக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.