ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளம் - ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் நாசம்..!
கருங்குளம் பகுதியில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள், வெள்ளநீரில் மூழ்கி வீணானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளும், சுற்றுவட்டார கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்தனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளநீரின் அளவு குறைந்து இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.
இதையும் படியுங்கள் : தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம் - நாளை மாலைக்குள் 90% முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல்
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் வாழை தோட்டத்திற்குள் புகுந்து வெள்ளநீரில் வாகனம் ஒன்றும் இழுத்துவரப்பட்டது. இதிலிருந்த ஓட்டுநர் வெளியேற முயற்சித்தபோது, நீரின் அளவு உயர்ந்ததால், இரண்டு நாட்களாக மரத்தின்மீது சிக்கித் தவித்துள்ளார். பின்னரே அப்பகுதி மக்கள் அவரை மீட்டுள்ளனர்.
அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் வெள்ள நீரால் நாசமாயின. தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறிய உபரிநீரானது, அண்டை கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.