ஆறுமுகநேரியில் உப்பளங்களை மூழ்கடித்த வெள்ளநீர்! உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு!
வீடாது பெய்த மழையால், திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் அமைந்துள்ள உப்பளங்கள் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதனால் திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முருங்கை மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனிடையே தூத்துக்குடி பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அங்கு மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் உப்பளம் முழுவதுமாக தண்ணீர் மூழ்கியுள்ளதால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலை தடுப்புகளும், டிரான்ஸ்ஃபார்மர்களும் சரிந்து உப்பளம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சாய்ந்துள்ளது. இதனை சரிசெய்யவும், உப்பளத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அங்குள்ள மக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.