கமுதி அருகே குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறை!
கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில் அமைந்துள்ள குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது
இதையும் படியுங்கள்: மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் எல்லையில், கமுதிக்கு அருகே மண்டலமாணிக்கத்தில் உள்ள குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்கு பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கண்மாய், ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குண்டாற்று வழியாக கமுதிக்கு தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகளில் வரும் பயணிகளை, கமுதி தீயணைப்புத்துறையினர் மற்றும் மண்டலமாணிக்கம் போலீசார், விருதுநகர் மாவட்ட எல்லையில் இருந்து மண்டலமாணிக்கம் கிராமத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து செல்கின்றனர்.