அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து #Kenya -வில் விமான ஊழியர்கள் போராட்டம்!
அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்யாவில் விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள அதானி நிறுவனம், கென்யா அரசுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை புதுப்பித்து, கூடுதல் ஓடுபாதை மற்றும் புதிய முனையம் அமைத்து அதனை 30 ஆண்டுகள் பராமரிக்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கென்யா அரசு அறிவித்திருந்தது.
இந்த ஒப்பந்தம் விமான நிலையத்தில் தற்போது பணிபுரிந்து வருபவர்களின் வேலை இழப்புக்கு வழிவகுக்கும் என்று கண்டனம் தெரிவித்துள்ள விமான நிலைய தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி, விமான நிலைய ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கென்யா ஏர்வேஸ் நிறுவனத்தின் பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்றும், ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் :உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க #Anbumani வலியுறுத்தல்
அதானி நிறுவனத்துடனான கென்யா அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, கென்யா மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். அந்த வழக்கை செப்டம்பர் - 09ம் தேதி விசாரித்த நீதிமன்றம், விசாரணை முடியும் வரை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.