தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக விமான நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் கடந்த 17 ஆம் தேதி விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாகவே மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமலும், உணவு கிடைக்காமலும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், அதிகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை மீட்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான குடிநீர் தாராளமாக இருக்கிறது..! - மத்திய அரசு விளக்கம்
தூத்துக்குடி விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) பிற்பகல் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, 3 நாள்களுக்கு பிறகு சென்னை - தூத்துக்குடி இடையே இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.