நிறைவடைந்த மீன்பிடி தடைக்காலம் - கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறைவடையும் நிலையில், தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் ஆர்வமுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு ஏப்.15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இதனால் வங்கக்கடல், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் முதல் சென்னை வரை, பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டது. இந்த தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.