மீன்பிடி தடைக்காலம் நாளை தொடக்கம் | காசிமேடு சந்தையில் குவிந்த மக்கள்...
மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குவதால் காசிமேட்டில் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர்.
தமிழ்நாட்டில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம். காசிமேட்டில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீன் வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர். வஞ்சிரம் ரூ.1,500, வவ்வால் மீன் ரூ.900, சங்கரா ரூ.600, தேங்காய் பாறை ரூ.850, இறால் ரூ.500க்கும் விற்பனை ஆகிறது.
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆண்டுதோறும் இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திவிடுவா். இவை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவா்கள் மேற்கொள்வா். மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபா் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவா்கள் ஈடுபடுவா். ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் வராது.
சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும். போதிய அளவில் மீன் வரத்தின்மையில், மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளின் விலை கணிசமாக உயரும். மீன்பிடித் தடைக்காலம் நாளை தொடங்க இருப்பதால் மீன்களை வாங்க கடற்கரைக்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.