"தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடி செலவில், மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது,
"தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க கடந்த 2.4.2025 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், கட்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும், இலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம்.
இலங்கை செல்லும் பிரதமர் மோடி, இலங்கை அதிபரிடம் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் வலியுறத்தினோம். அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமர் மோடிக்கு அனுப்பியும் வைத்தோம். இந்த நிலையில், பிரதமர் மோடி இலங்கை சென்றார். அப்போது, கட்சத் தீவு, மீனவர்கள் விடுவிப்பு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளும் திருப்பி தாயகம் அனுப்பப்படாதது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்கள் அடிக்கடி அதிக அளவில் கைது செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக நம் அனைவருக்கும் கவலைக்கு உள்ளாக்கும் செய்தியாகும். மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கைகளை புறக்கணிக்கிறார்கள் என்றே கருதவேண்டியுள்ளது. மத்திய அரசு எவ்வாறு நடந்துக்கொண்டாலும் நமது மீனவர்களை காக்க நாம் தவற மாட்டோம். மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், அவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.
தமிநாட்டின் கடலோர மாவட்டங்கள் குறிப்பாக மன்னார் வலைகுடா பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் மீட்பிடிக்கச் செல்லும் போது ஏற்படும் இன்னல்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், மீனவர்கள் கைது செய்யப்படும், அவர்களின் படகுகள் சிறைப்பிடக்கப்படுவதும், அந்த படகுகள் நாட்டுடமையாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக, தெற்குப் பகுதியில் இந்திய பெருங்கடல் நோக்கி செல்ல வழிவகை செய்யும் பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடி செலவில், மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.