மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் - 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 55-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே மீனவர்களை விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று மாலை சுமார் 4 மணியளவில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை மறித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக 8 டிஎஸ்பி, 16 ஆய்வாளர்கள் என 859 போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் என நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கபட்டுள்ளனர்.