"ஆம்னி பேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கேரள மாநிலத்திற்கு சென்ற தமிழ்நாடு பதிவெண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் அம்மாநில போக்குவரத்து துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, 70 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநிலச் சாலைவரிகளை செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக கூறி கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த திடீர் நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவையை முழுமையாக முடக்கும் அளவிற்கு அமைந்துள்ளது.
சுவாமி ஐயப்பனை தரிசிக்க தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கேரளத்தை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கியிருக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகள் வேலைநிறுத்தம் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு என தனி வகையிலான பெர்மிட் (Permit) இல்லாத காரணத்தினால் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துகளை இயக்குவதிலும், விபத்துக்கள் ஏற்படும் போது இன்சூரன்ஸ் கோரி விண்ணப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருப்பதாக ஆம்னிபேருந்து உரிமையாளர்கள் தங்கள் தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மற்றும், அதனால் பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் விடுத்திருக்கும் தனி பெர்மிட் (Permit) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.