தமிழ் ஊடகத்தில் முதல் பெண் முதன்மை ஆசிரியர் - நியூஸ் 7 தமிழின் மற்றுமொரு மைல்கல்!
தமிழ் ஊடக வரலாற்றில் முதன் பெண் முதன்மை ஆசிரியராக சுகிதா சாரங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் செய்தி ஊடகத்துறையில் ஒரு புதிய சாதனையை நியூஸ் 7 தமிழ் படைத்துள்ளது. முதன் முறையாக, தமிழ் செய்தி ஊடகத்தின் முதன்மை செய்தி ஆசிரியராக சுகிதா சாரங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் ஊடக உலகில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. முதன்முறையாக, தமிழ் செய்தி ஊடகத்தின் முதன்மை செய்தி ஆசிரியராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்களே அதிக அளவில் பணிபுரியும் இத்துறையில், ஒரு பெண் இது ஒரு மாபெரும் முன்னேற்றம்.
பல ஆண்டுகால கடின உழைப்புக்கும், சவால்களை எதிர்கொண்டதற்கும் கிடைத்த வெற்றி இது. இதன் மூலம் தமிழ் ஊடகத்துறையில் பெண்களுக்கு ஒரு புதிய பாதை அறிமுகமாகியுள்ளது. சுகிதா சாரங்கராஜின் நியமனம் இத்துறையில் புதிய கண்ணோட்டங்களையும் பன்முகத்தன்மையையும் உருவாக்கும்.
பல ஆண்டுகளாக பெரும்பாலும் ஆண்களே தலைமைப் பொறுப்புகளில் இருந்த தமிழ் ஊடகங்களில் நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு ஒரு முக்கியமான மைல்கல். சுகிதா சாரங்கராஜின் தொடர் பணிகள், தமிழ் செய்தி ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, வரும் காலங்களில் மேலும் பல பெண்கள் உயர் பதவிகளை அடையவும் ஊக்கமளிக்கும்.
இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல…தமிழ் ஊடகத்துறையில் உள்ள அனைத்துப் பெண்களின் திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அறத்துடன் கூடிய ஊடகச் செயல்பாடு மற்றும் பாலினச் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணிகளை சுகிதா சாரங்கராஜ் மேற்கொள்வார் என்ற நம்பிக்கையை நியூஸ் 7 தமிழ் விதைக்கிறது .
நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி 2014-ல் தொடங்கிய போது 50 சதவிகிதம் பெண்கள் அனைத்து பிரிவுகளிலும் பங்களிப்பு செய்யும் விதமாக மனித வள மேம்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் முதல் நாள், முதல் செய்தி நேரலையை முழுக்க முழுக்க பெண்களே பங்கெடுத்து தொடங்கி வைத்தது, தமிழ் ஊடகங்களின் புருவங்களை உயர்த்தியது.
அதே போன்று பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 2017 ம் ஆண்டு விஷாகா கமிட்டியை உருவாக்கி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ததோடு பாலின சமத்துவத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தொலைக்காட்சிக்குள்ளே மட்டுமல்ல சமூகத்தில் பெரும்பாங்காற்றி உயரம் தொட்ட பெண்களை கண்டறிந்து அவர்களது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக நியூஸ் 7 தமிழ் தங்க தாரகை விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
தற்போதும் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை முதன்மை ஆசிரியராக பொறுப்பேற்க வைத்ததன் மூலம் பாலின சமத்துவத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் நியூஸ் 7 தமிழ் பெருமை கொள்கிறது. சுகிதா சாரங்கராஜின் தலைமையில் தமிழ் ஊடகத்துறை புதிய உயரங்களை அடையட்டும் என நியூஸ் 7 தமிழ் வாழ்த்துகிறது!