கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்!
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று ( நவ.12) முதற்கட்ட சோதனையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 100 பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் அனுப்பப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள், 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவல்நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முதற்கட்டமாக வண்டலூர் பூங்காவில் இருந்து இன்று ( நவ.12) காலை 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து வரும் பொங்கல் பண்டிக்கைக்குள் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.