முதல் டி20 | பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று (மார்ச் 16) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் பிரெஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 18.4 ஓவர்கள் முடிவில் 91 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் ஜேகப் டபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.தொடர்ந்து நியூசிலாந்து அணி வீரர்கள் ரன்களை குவித்தனர். இறுதியில் 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டிம் செய்ஃபர்ட் 44 ரன்கள் எடுத்தார். ஃபின் ஆலன் 29 ரன்களுடனும், டிம் ராபின்சன் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2ஆவது டி20 போட்டி மார்ச் 18ம் தேதி நடைபெறவுள்ளது.