18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது - நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூட உள்ள நிலையில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எனினும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.
மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர். மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். ஜூன் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே, புதிய மக்களவைத் தலைவராக தேர்வாகப் போவது யார்? என்ற கேள்வி நீடித்து வருகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே மக்களவைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பாஜக விட்டுக் கொடுக்காது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை ராஜஸ்தான் எம்.பி. ஓம் பிர்லா மக்களவைத் தலைவராக செயல்பட்டார். அவருக்கே பாஜக மீண்டும் வாய்ப்பளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாளை நடைபெற மக்களவைக் கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் நீட் தேர்வு வினாத் தாள் கசிவு விவகாரத்தை பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை , வரலாறு காணாத வெப்பச் சலனம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், தேர்வுகளை நடத்துவதில் சமீபத்திய முறைகேடுகள் போன்ற பல பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.