பட்டாசு விற்பனை என நூதன மோசடி - எப்படி தப்பிப்பது?
தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், இந்த அதிகரித்த தேவையை சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மோசடி நடைபெறும் விதம் குறித்தும், அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் சைபர் க்ரைம் போலீசார் விளக்கியுள்ளனர்.
மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுகள் நம்ப முடியாத விலையில் கிடைப்பதான விளம்பரத்தை யூடியூபில் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு ஆர்டரைப் பற்றி விசாரிக்கிறார். கஸ்டமர் கேர் நபர் பாதிக்கப்பட்டவரின் அழைப்பிற்கு பதிலளித்து, ஆர்டர் செய்த பிறகு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிருமாறு அவருக்குத் தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்டவர் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள https://luckycrackers.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்கிறார். பின்னர் வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார். விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், பொதுமக்கள் தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.
ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பு எண் மற்றும் இணையதளம் அணுக முடியாததாகிவிட்டதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் இழந்து பட்டாசுகளும் வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர். கடந்த 1 மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மோசடிகளில் இருந்து எப்படி தப்பிப்பது?
நாம் வாங்கும் இணையதளத்தின் சட்டப்பூர்வமான தன்மையை எப்போதும் சரிபார்க்க வேண்டும். வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்த்து, அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணையதளத்தில் உள்ளதா எனச் சரிபார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.
பிரபலமில்லாத இணையதளங்களுக்கு, கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம் பணத்தை கொடுப்பதற்கு முன் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் டெலிவரி செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். போலி இணையதளத்தில் ஏதேனும் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்திருந்தால், கடவுச் சொற்களை மாற்றுதல் மற்றும் நமது வங்கி கணக்குகளைக் கண்காணிப்பது போன்ற நமது அடையாளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்கிரீன்ஷாட்கள், மின்னஞ்சல் தகவல் தொடர்புகள் மற்றும் இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்கள் உட்பட நமது பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும். மோசடியைப் புகாரளிக்க வேண்டும் என்றால், இந்தப் பதிவுகள் முக்கியமானதாக இருக்கும். இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.