சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு விற்பனை!
தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பு குறைந்த நிலையில் கூட கடந்தாண்டை விட, நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்த நிலையில், இந்த ஆண்டு 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்று தீர்ந்துள்ளது. இந்நிலையில், பட்டாசுகள் வாங்கி ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கு பட்டாசு விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்