இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகம் உள்ளது. அந்த துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கப்பலின் கியாஸ் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
இந்த விபத்தில் 10 பணியாளர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009ல் கட்டப்பட்ட இந்தக் கப்பலில், கடந்த ஜூன் மாதமும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்த தீ விபத்து வெல்டிங் பணியின் போது ஏற்பட்ட தீப்பொறிகளால் ஏற்பட்டது. அதே கப்பலில் தற்போது மீண்டும் தீ விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.