தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!
ஆன்லைன் மூலமாக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது , 48 மணி நேரத்திலே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தீயணைப்புதுறை டிஜிபி தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வு மத்திய சென்னை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியில் நடைப்பெற்றது.
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து, நடனத்துடன் கூடிய கலை நிகழ்ச்சி மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதோடு பண்டிகையின்போது தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நடைபெற்றது. இதில் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று செய்து காட்டினர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் பட்டாசு வெடிப்பது குறித்து மட்டுமில்லாமல், கல்லூரி பருவத்தில் அனைவரோடும், அன்போடு பழகுவதையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”கான்கிரீட் கட்டிடங்களில் மட்டுமே பட்டாசுகடைகள் போடப்பட வேண்டும், ஆனால் சில இடங்களில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அடுத்த ஆண்டில் கடுமையான கட்டுபாடுகள் கடைப்பிடிக்கப்படும். ஆன்லைன் மூலமாக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. முதல்முறை என்பதால் சற்று தாமதமானதாகவும் , தற்போது விண்ணப்பித்த 48 மணி நேரத்திலே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
5% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. 8000 தீயணைப்பு துறையினரும், விடுமுறை இல்லாமல் பணியில் ஈடுப்பட உள்ளனர். குறுகிய சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சென்று தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு வெடிக்கும்போது கவனமுடனும், குடிசைகள் அருகே வெடிக்கக்கூடாது எனவும், பக்கெட்டில் தண்ணீர் வைத்து கொண்டு வெடிக்க வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தார்.