#Dindigul | வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து - ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக வெடி மருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மூலச்சத்திரம் பகுதியில் ரூபன் என்பவர் ரிச்சி கார்ஸ் என்ற பெயரில் கார் சர்வீஸ் செய்யும் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். அவர் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டதன் காரணமாக கார் சர்வீஸ் செய்யும் குடோனை, ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி பகுதியைச் சேர்ந்த முஸ்தாக் (25) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் முஸ்தாக் சட்ட விரோதமாக பாறைகள் வெடிக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் என்னும் வெடி மருந்து பொருட்களை குடோனில் பதுக்கி வைத்துள்ளார். இதனிடையே நேற்று (டிச. 18) நள்ளிரவு வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் குடோனில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் கருகியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் தீ விபத்தில் காயமடைந்த ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி பிரதீப், டி எஸ் பி கார்த்திகேயன், ஆய்வாளர் தங்கராஜ், உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குடோனின் உரிமையாளர் மற்றும் வெடி மறுத்து பதுக்கி வைத்திருந்த நபர் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஒட்டன்சத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் களைந்து போக செய்தனர்.