For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் கடும் அவதி !

08:12 AM Jan 02, 2025 IST | Web Editor
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து   நோயாளிகள் கடும் அவதி
Advertisement

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ஐந்து தளங்கள் கொண்ட பல்நோக்கு சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் நேற்று இரவு திடீரென மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக மின்சார வயர்களில் தீப்பற்றியதால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை நோயாளிகள், ஆண்கள், பெண்கள் பிரிவு உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது தீ விபத்தினால் கரும்புகை சூழ்ந்ததால் மருத்துவனை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் டார்ச் லைட் மற்றும் அவசர விளக்குகளை பயன்படுத்தி மூன்று தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை முதல் தளத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு மற்ற நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து மின் கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இன்வெர்டர் அறை மற்றும் நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ள அறைகளை பார்வையிட்டு நோயாளிகளின் உறவினர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
Advertisement