சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 'பேஸ்-1' மற்றும் 'பேஸ்-2' திட்டங்களுக்கான நிதி விவரம்!
சென்னை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது நாடாளுமன்றத்தில் வெளிவந்துள்ளன. வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் டோகன் சாகு அளித்த பதிலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் பல்வேறு கட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து 54 கி.மீ. தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் ‘பேஸ்-1’ முதற்கட்ட திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.22,149.92 கோடி வழங்க ஒப்புதல் அளித்தது. இதில் ரூ.15,355.78 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, தற்போது சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பாட்டில் உள்ளது. இது நகரின் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்து, பயணிகளுக்குப் பெரும் வசதியை அளித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 50:50 என்ற விகிதத்தில் நிதி செலவிடும் வகையில், ரூ.63,246.4 கோடி மதிப்பில் ‘பேஸ்-2’ திட்டத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.5,554.15 கோடி வழங்கியுள்ளது.
மேலும், மாநில அரசு இந்தத் திட்டத்திற்காகத் தேவையான கடன்களைப் பெறுவதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த இரண்டாம் கட்டத் திட்டம் சென்னையின் மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தி, அதிகப் பகுதிகளுக்குப் போக்குவரத்து வசதியை கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட இந்தத் தகவல்கள், சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்கான திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.