“ஒரு மனிதனை சிறந்தவனாக மாற்றும் படங்களே சிறந்த படம்” - இயக்குநர் HVinoth!
ஒரு மனிதனை இன்னும் மேம்பட்ட மனிதாக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கிற படங்களே சிறந்த படங்கள் என இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சசிக்குமார், பிக்பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நந்தன்’. இந்தப் படத்தை உடன்பிறப்பே, கத்துக்குட்டி போன்ற படங்களை இயக்கிய சரவணன் இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீடு நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசியதாவது;
என்னுடைய படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு டயலாக்கான 'உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு' என்ற டயலாக் இயக்குநர் சரவணனுக்குத்தான் பொருந்தும். சரவணனின் மனைவி பள்ளி ஆசிரியையாக இருந்தபோதிலும், இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது அவர் பாத்திரம் கழுவியதை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். எங்களைவிட அவர்தான் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்.
நான் இந்தப் படத்தில் ரயில் ஏற்ற சென்றவன் போலத்தான் நான்கு நாட்கள் சூட்டிங்கிற்காக, கமிட் செய்திருந்தார்கள். வழியனுப்ப வந்த என்னை இயக்குநர் ட்ரெயினில் ஏற்றி விட்டார். அந்தப் படத்தில் வேறொருவர் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அதில் நான் நடிக்க வேண்டியதாகி விட்டது.
இந்தப் படத்தை நல்லவேளை நான் தவறவிடவில்லை. நந்தன் படத்தை நான் தயாரிக்க நினைத்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் இஷ்டப்பட்டுதான், கஷ்டப்பட்டேன். இந்தப் படத்தில் சரவணனின் எழுத்து மிகப்பெரிய பாராட்டுகளைப் பெறும். இது படம் அல்ல ஒரு பதிவு” என சசிகுமார் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் வினோத் பேசியதாவது;
“என்னைப் பொருத்தவரையில் எது நல்ல படம் என்றால், பெரிய பட்ஜெட் கொண்ட படமோ, பெரிய நடிகர்கள் நடிக்கும் படமோ அல்லது பாக்ஸ்- ஆபிஸ் வசூலிக்கும் படங்களோ அல்ல. ஒரு மனிதனை இன்னும் மேம்பட்ட மனிதாக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கிற படங்களே சிறந்த படங்களாகும். நந்தன் சிறந்த படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளியுங்கள்” என்றார்.