"AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் படமெடுக்கலாம்" - Ustream துவக்க நிகழ்ச்சியில் #ARRahman பேச்சு!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் படம் எடுக்கலாம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை ஐயர் கண்டிகை பகுதியில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் முழுமையான தொழில்நுட்ப மெய்நிகர் பணிகளை வழங்கும் யூஸ்ட்ரீம்ஸ் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த ஒலிப்பதிவு ஸ்டுடியோவானது 7000 சதுர அடிகள் பரப்பளவை கொண்டுள்ளது.
மேலும், கேமரா ட்ராக்கிங் காட்சிகளுக்கு ஏற்ற ஒலி அமைப்பு பெறுதல், பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடனும் ஏ எல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து தேவையான அனைத்து வசதிகள் மற்றும் இணையதள வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டுடியோவாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது,
"ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் ஆந்திரா, மும்பை ஆகிய இடங்களில் உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் யூஸ்ட்ரீம்ஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் சென்னையில் வந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பார்த்து பயப்படக்கூடாது. அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பிரம்மாண்ட படம் எடுக்க வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் படம் எடுக்கலாம். யூஸ்ட்ரீம் நிறுவனத்துடன் இணைந்து விஎப்எக்ஸ் சிஜிப்ரோ, ஏஐ தொழில் நுட்பத்துடன் விர்ச்சுவல் ப்ரோடக்ஷன் டெக்னாலஜி ஸ்டுடியோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்."
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்