ஃபெஞ்சல் பாதிப்பு - ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய சிவகார்த்திகேயன்!
ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனையடுத்து சாத்தனூர் அணையில் டிச.2ஆம் தேதி வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தென்பண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டு மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர்.
மேலும் திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. பல வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. விழுப்புரம் முழுவதும் கனமழையால் வெள்ள நீரில் மூழ்கியது. வெள்ள நீரில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் படகு மூலமும், கயிறு கட்டியும் மீட்டுப் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர்.
தொடர்ந்து இந்த மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் பாதிப்பை கருத்தில்கொண்டு தேசிய பேரிடர் நிதியில் இருந்து, நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.