#Fengal புயல் பாதிப்பு - மத்திய குழு இன்று ஆய்வு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டடுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மத்திய குழு இன்று (டிச.7) ஆய்வு மேற்கொள்கிறது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று (டிச.6) சென்னை வந்தது. இக்குழு இன்றும் நாளையும் (டிச.7,8) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. முன்னதாக, வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.6675 கோடி ரூபாய் வழங்க மத்திய குழு பரிந்துரைத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.