புதுச்சேரி அருகே கரையை கடந்த #Fengal புயல்... கொட்டி தீர்த்த கனமழை!
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது.இந்த 'பெஞ்சல்' புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பிற்பகல் வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயல் நேற்று (நவ.30) மாலை 5.30 மணியளவில் பயங்கர சூறாவளிக் காற்றுடன் நிலப்பரப்பை எட்டியது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.
முதலில் முனைப்பகுதியும், அடுத்து மையப்பகுதியான கண் பகுதியும், இறுதியில் வால் பகுதியும் கடந்தது. அடுத்த சில மணி நேரத்தில் இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்ததை அடுத்து புதுச்சேரியில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.