ஊத்தங்கரையை புரட்டி எடுத்த #Fengal… ஒரே நாளில் 50 செ.மீ. மழை பதிவு… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!
ஊத்தங்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மினி பேருந்துகள், கார்கள் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.
தொடர்ந்து, புதுச்சேரி அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புயல் கரையை கடந்த பிறகும் விழுப்புரம், கிருஷ்ணகிரி, புதுச்சேரி பகுதிகளில் நேற்று (டிச1) கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. ஊத்தங்கரை பாம்பாறு அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரையில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மினி பேருந்துகள், கார்கள் அடித்து சொல்லப்பட்டன. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், உத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.