லஞ்சம் கேட்ட பெண் விஏஓ - கையும் களவுமாக கைது!
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அடுத்த கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரவேல். இவர் ஆன்லைனில் பட்டா மாற்றுதலுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான ஆவணங்களை சரிபார்த்து வழங்க அதே பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் பத்மாவதியிடம் கொடுத்துள்ளார்.
விஏஓ பத்மாவதி ஆவணங்களை சரிபார்க்க , குமாரவேலிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் அந்த தொகையை அவர் தர இயலாததால் 5000 ரூபாய் வரை பத்மாவதி பேரம் பேசி, இறுதியாக 4500 ரூபாய் கொடுத்தால்தான் ஆவணங்களை சரிபார்த்து தருவேன் என கராராகக் கூறியதாக குமாரவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் கேட்டதால் மனமுடைந்த குமாரவேல் இது குறித்து தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இன்று(ஜன.21) காலை அதிகாரிகள் விஏஓ பத்மாவதியை கண்காணித்துள்ளனர்.
அப்போது குமாரவேலிடம் இருந்து ரசாயன பவுடர் தடவப்பட்ட 4500 ரூபாயை பத்மாவதி லஞ்சமாக பெற்றுக்கொண்டபோது, தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பால்சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் ஆகியோர் விஏஓ பத்மாவதியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.